புதன், 17 பிப்ரவரி, 2010

ஏங்கோ ப‌டித்த‌வை 1 :

வேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது
சாருநிவேதிதா

(‘இன்னார் செய்தாரை ஒறுத்தல்’ எனும் நாகரிகமான தமிழர் மரபுக்கு - சாராயத்தைக் குடித்துவிட்டு எதிரியின் கண்களைத் தோண்டு என்று கூறும் வேதங்கள் நேர் முரணானது என்று, எழுத்தாளர் சாருநிவேதிதா, எழுதியுள்ளார். ராஜமுத்திரை வார இதழில் - (மார்ச் 22) வெளிவந்த கட்டுரை இது.)

பெரியார் மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப் பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய்விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.

உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருண பேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும், இதிகாசங் களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.

இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது, முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் ஆகப் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான்.

வேதத்தில் இல்லாததே இல்லை யென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலைகீழாகவும் ஓதத் தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன. இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுகவர்கள் புரோகிதர்கள். ‘வாத்தியார்’ என்று பிராமணர்களின் பேச்சு மொழியால் அழைக்கப்படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின் போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள்.

அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக:

‘நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு.’
‘எனது சலனம் தேன் மயம். என் மனம் தேன் மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்.’ (அதர்வ வேதம்; காண்டம்: 1.34 தேன் மயம்)

ஆனால், இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம். எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பிராமணர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக் கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள்.

‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’
‘எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’. (அத்தியாயம்: சம்ஹாரம்)
‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’
‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’
‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.
‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’
‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’
‘இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு.’ இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாஸ்திரங்களுக்கு விரோத மானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருப்பது போல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன.

எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேதமந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுயநலத்தையும், துவேஷத்தையும்தான் முழங்குகின்றன.

இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரிகளைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது.

‘ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ரிதம் நம்முடையது. தேஜஸ் நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது.’

அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம் ‘நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி.’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம்.

‘அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற ‘உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன.

நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதில் காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன.

ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப் பாடல்கள் ‘இந்திரனே இங்கே வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும், எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்.’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வெற்றுச் சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது.

நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த ஒரு இனம் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது.

ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக்கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை.

எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய ‘ஜீம்பூம்பா’ கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

- சாரு நிவேதிதா -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக